நடிகரும், இயக்குநருமான மனோ பாலாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அஞ்சலி

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா இன்று காலை உயிரிழந்தார். இவரது மரணச் செய்தியை கேட்டு திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்த நிலையில், திரையுலகினர் பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பேரிழப்பு

நடிகர் மனோ பாலாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது; “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு திரையுலகினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மிகுந்த வருத்தம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; “தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மனோபாலா `ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் மனோபாலா, அதிமுகவின் மீதும், தொடர்ந்து கட்சித் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கட்சியின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்”. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here