கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

சட்டப்பேரவை தேர்தல்

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. தென் மாநிலங்களில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியிடப்படுகிறது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர்கள் முகாம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா சென்றுள்ள ராகுல் காந்தி, இன்று பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா இன்று முதல் 3 நாட்கள் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகம் வரவுள்ளனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை பிரச்சாரம்

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை (ஏப் 25), நாளை மறுநாள் (ஏப் 26) ஆகிய நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை கர்நாடகா செல்லும் அவர், தி. நரசிபுரத்தில் உள்ள கெலவரகண்டியில் மதியம் 1 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சாமராஜநகர் மாவட்டம் ஹனூரில் உள்ள கவுரிசங்கர் கன்வென்ஷன் ஹாலில் மாலை 3 மணிக்கு நடைபெறும் மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here