சென்னையில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பரிதாப பலி

சென்னை நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வழக்கமாக, தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உற்சவ மூர்ததிகளையும், அபிஷேகப் பொருட்களையும் நீரில் 3 முறை மூழ்கடித்து எடுத்து செல்வார்கள். இந்தப் பணிகளில் அர்ச்சகர்கள் ஈடுபடுவர். அந்த வகையில், இன்று காலையும் கோயில் அருகே உள்ள மூவசரம்பட்டு குளத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இறங்கினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் அபிஷேக பொருட்களுடன் அவர்கள் இடுப்பளவு உள்ள நீரில் மூழ்கினர். இரண்டு முறை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் மூழ்கி எழுந்த நிலையில், மூன்றாவது முறையாக மூழ்கிய போது அர்ச்சகர் ஒருவரின் கால், குளத்தில் உள்ள சேற்றில் சிக்கியது. சேற்றில் கால் நன்றாக சிக்கிக் கொண்டதால் அவர் நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்த மற்ற அர்ச்சகர்கள் என்ன ஆனது எனத் தெரியாமல் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களும் அங்கிருந்த சேற்றில் சிக்கினர். இவ்வாறு 5 இளம் அர்ச்சகர்கள் சேற்றில் சிக்கிக்கொண்டு தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். ஒரு சில நிமிடங்களிலேயே 5 அர்ச்சகர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேதனை

இந்நிலையில், கோயில் திருவிழாவின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி சூர்யா (22), பானேஷ் (22), ராகவன் (22), யோகேஸ்வரன் (21) மற்றும் ராகவன் (18) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அலட்சியம்

5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது… உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here