மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

ஆதார் இணைப்பு

தமிழக மின் வாரியம் சார்பில் வீடுகள் உட்பட 2.67 கோடி இணைப்புகளுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. முதலில் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் பலர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், மேலும் 15 நாட்கள் (பிப்.,15 வரை) நீட்டிக்கப்பட்டு, அதற்குள் இணைக்க வலியுறுத்தப்பட்டது.

அவகாசம் நீட்டிப்பு

தமிழக அரசு தெரிவித்த அவகாசம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், சுமார் 7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. இதனால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.80 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இணைக்க வேண்டி இருப்பதால் இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்கு பின் அவகாசம் வழங்கப்படமாட்டாது. தொழில்நுட்பம் கோளாறு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here