ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து திமுக கூட்டணியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.. இதை போல நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளன. ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிடுபவர் யார் என்ற கேள்வியானது எழுந்திருந்தது. இந்த நிலையில், நேற்று பாஜக சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லையென அறிவிக்கப்பட்டது.

வேட்பாளர் அறிவிப்பு

இதனையடுத்து அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுவார் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் படி வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சின்னம் முடங்குமா?

அதிமுகவின் இபிஎஸ் அணி சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனது அணியின் வேட்பாளரை இன்று அறிவிப்பார் எனத் தெரிகிறது. இரண்டு அணிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here