சென்னைக்கு தென்கிழக்கு 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ‘மாண்டாஸ்’ புயல், புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘மாண்டாஸ்’

இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு பகுதி 460 கி.மீ தொலைவிலும் ‘மாண்டாஸ்’ புயல் நிலை கொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாக்கு இடைப்பட்ட பகுதியில் இது கரையை கடக்கக்கூடும். இதன்காரணமாக டிச., 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கனமழை

இன்று (டிச.,8-ம் தேதி) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அதி கனமழை

நாளை (டிச.,9-ம் தேதி) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை

10-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சூறைக்காற்று

காற்றைப் பொருத்தவரை இன்று (டிச.,8-ம் தேதி) தமிழக கடற்கரை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை காலை முதல் மாலை வரை வடதமிழக பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும். 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி காலை வரை உள்ள காலகட்டத்தில், 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல், வடதமிழக கடற்கரை ஓட்டிய தமிழக கடலோரப் பகுதிகள், மன்னர் வளைகுடா பகுதிகளில் இன்று (டிச.,8) சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும், சமயத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசம். நாளை (டிச.,9) 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களை 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்

டிச.,10-ம் தேதி வரை தமிழக கடற்கரை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் 10-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது”. இவ்வாறு தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here