திருவண்ணாமலையில் இன்று நடைபெற இருக்கும் மகா தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பரணி தீபம்

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா தீபம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டன. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

குவியும் பக்தர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர். அவர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இதனையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் நகராட்சித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறையால் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கிரிவலப்பாதை அடிக்கடி தூய்மை பணியாளர்களால் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 இணைப்பு சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உரிய சோதனைக்கு பின்னரே வாகனங்களை போலீசார் நகருக்குள் அனுமதித்த வருகின்றனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 காவல் கண்காணிப்பாளர்கள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் அங்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here