கைலாசா எனும் தனி நாட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் கட்டப்போவதாக கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சர்ச்சை சாமியார்

இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இருந்து தப்பியுள்ள அவர், தனது ருத்ர கன்னிகளுடன் சேர்ந்து தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு ‘கைலாசா’ என பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கிறார். அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வந்தாலும், அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், கூட்டாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களையும் அவரது ருத்ர கன்னிகள் வெளியிட்டனர்.

உடல்நிலை மோசம்

கைலாச என்னும் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள சாமியார் நித்யானந்தா பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. நித்யானந்தாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த நித்தியானந்தா, தான் நலமுடன் இருப்பதாக கூறினார். ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டு இருப்பதாகவும், விரைவில் உடலில் குடியேறி மீண்டு வந்து வழக்கமான சத்சங்களை மேற்கொள்வேன் எனவும் கூறியிருந்தார். அதன்பிறகு அவ்வப்போது தகவல்களை நித்தியானந்தா பதிவிட்டு வந்தார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குருபூர்ணிமா நாளான ஜுலை 13-ந் தேதி மீண்டும் நேரில் தோன்றி தரிசனம் அளிக்க உள்ளதாக அறிவித்தார்.

சத்சங்

இந்த நிலையில், நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; நான், நாளை (13-ந் தேதி) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன். சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கே மங்கலம் வழங்கப்போகும் இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது. இந்த 3 மாத இடைநிறுத்த சமாதியானது (ஏப்ரல் 13-ந் தேதி முதல் – ஜூலை 13-ந்தேதி வரை) பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய மற்றும் சிறந்த ஒரு நிகழ்வாகும். உங்கள் உயிர் இருப்பில் (சத்) பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. இணை பிரபஞ்சங்கள் மற்றும் பன்முகங்களைப் பற்றிய உயர் சத்தியங்கள் அக விழிப்புற்ற மக்களுக்கு மேலும் மேலும் கிடைக்கப்பெறும். நிரம்பி, பொங்கித் ததும்பி வழியும் சாந்தியால் மூடப்பட்ட நிலையே சாந்திகலா ஆகும். அதாவது பரமசிவனின் நிர்விகல்ப சமாதி ஆகும். சாந்திகலாவுக்கு அப்பால் உள்ள சாந்த்யாதீத கலா என்பது பரமசிவனின் சகஜ சமாதி.

செவ்வாயில் சிவன் கோவில்

மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது. எனது நோக்கமும் பணியும் உயிர்ப்பும் இம்மனித குலத்திற்கு செய்யக்கூடிய பெரும் பங்களிப்பானது, உன்னதமானது. கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்புக்கான எனது தூய அன்பு உன்னதமானது. பரமசிவமே இந்த உடம்பின் வழியாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறார். மேலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பல நிலைகளில் ஆன்மீக ரசவாத செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ரசவாத செயல்முறையின் மூலம் குறை சக்தியுடைய உலோகங்கள் உயர் சக்தியுடைய உலோகங்களாக மாற்றப்படுகின்றன. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்காகப் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த மங்களகரமான குரு பூர்ணிமா நாளில் எனது குரு பரம்பரைக்கு என்னை அர்ப்பணித்து 42-வது சதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்குகிறேன். வளப்படுத்தி மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள். இவ்வாறு சாமியார் நித்தியானந்தா அதில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here