புராதன பொருள் எனக்கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மோன்சன் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மோசடி மன்னன்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலூர் பகுதியில் வசித்து வருபவர் மோன்சன். பழங்கால பொருட்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி  தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் சொந்தமாக ஒரு அருங்காட்சியகம் வைத்துள்ள மோன்சன், அங்கு  பழங்கால பொருட்களை சேமிப்பது போல் நாடகமாடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரை தனது அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுடன் இருக்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதை வைத்து மற்றவர்களை ஏமாற்ற தொடங்கியுள்ளார். தான் சேகரித்த  பொருட்கள் அனைத்தும் பழங்கால பொருட்கள் என அனைவரையும் நம்ப வைத்துள்ள மோன்சன், இதன்மூலம் பலரிடமும் கோடிக்கணக்கில் பணமோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இப்படி கொச்சியில் பழங்கால புராதன பொருட்கள் இருப்பதாக கூறி, பணமோசடி செய்ததாக கடந்த ஆண்டு மோன்சன் கைது செய்யப்பட்டார்.

மோகன்லாலுக்கு சிக்கல்

நான்கு முறை தேசிய விருதுகள், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்று உச்ச நட்சத்திரமாக திகழும் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு, புராதன பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். தனது கொச்சி, சென்னை, ஊட்டி, துபாய் உள்பட பல இடங்களிலுள்ள வீடுகளில், அரிய புராதன பொருட்களை வாங்கி கேகரித்து வந்துள்ளார் மோகன்லால். பல நூறு கோடி ரூபாய் கருப்பு பண மோசடியில் ஈடுபட்ட மோன்சன் கைது செய்யப்பட்டதையடுத்து, தனது விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை. மோன்சனின் மோசடி தொடர்பாக நடிகர் மோகன்லாலிடம் விசாரணை நடத்த முடிவு செய்த அமலாக்கத்துறை, அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நடிகர் ஒருவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், திரையுலகினரை அதிர வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here