இலங்கையில் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

போராட்டம்

இலங்கையில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி அந்நாட்டை பதம் பார்த்துள்ளது. இதனால் கோபமடைந்த மக்கள், ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் இறங்கினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டம், கடந்த 9-ந் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் 9 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புதிய பிரதமர்

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இருப்பினும் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்து இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவெடுத்து, அதற்கான பணிகளில் இறங்கினார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் அவர் அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக நேற்று முன்தினம் மாலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து நேற்று தனது அலுவலகத்தில் அவர் பணிகளை தொடங்கினார்.

கைது செய்யுங்கள்

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற போதும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், டெம்பிள் ட்ரீஸ் மற்றும் கலே பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி குற்றச்செயலில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, குற்றப்பிரிவு விசாரணை துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் ஒருவர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here