ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்து சுப நிகழ்ச்சிகள் தொடங்கியதால் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

சுப முகூர்த்த நாள்

தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்திருப்பதால் திருமண நிகழ்ச்சிகள் கலைக்கட்டின. அதிலும் இன்றைய தினம் பிரதோ‌ஷம், வரலட்சுமி நோன்பு, சுப முகூர்த்த நாள் ஆகியவை ஒரேநாளில் வருவதால் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் பல கோவில்களில் திரளான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் வழிபாட்டு தளங்களை முழுவதுமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவில்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

கோவில் வாசலில் திருமணம்

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல், திருத்தணி முருகன் கோவில், சீர்காழி வைத்திஸ்வரன் கோவில், கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி உள்ளிட்ட பல கோவில்கள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் இன்று சுப முகூர்த்த நாள் என்பதால் மூடப்பட்டிருந்த கோவில்கள் முன்பு பெண்கள் உள்பட ஏராளமானோர் விளக்கேற்றி வழிபட்டனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு புதுமண ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண தம்பதியினர் குவிந்தனர். சீர்காழி அருகே வைத்திஸ்வரன் கோவில் மூடப்பட்டுள்ளதால் கோபுர வாசலில் நின்று புதுமண தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வாசலில் மணமக்கள் தாலி கட்டிக் கொண்டனர்.

வீட்டிலேயே வழிபாடு

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருமணங்கள் களைகட்டின. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் வேண்டி விரதமிருந்து வீட்டிலேயே வழிபட்டனர். சாலையோரம் மற்றும் தெருக்களில் உள்ள சிறிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு திரளான பெண்கள் குவிந்து வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here