வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுள்ளது.

அனேக இடங்களில் மழை

நாளை கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here