வன்முறையை தூண்டும் வகையில் மீரா மிதுன் பேசி வீடியோ வெளியிட்டதால் அவரது யூ-டியூப் சேனலை முடக்கக்கோரி யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சவால்விட்ட மீரா

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேந்தவர்களைப் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது சைபர் கிரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுன், தன்னை கைது செய்யவே முடியாது என்றும் அது கனவில் தான் நடக்கும் எனவும் காவல்துறையினருக்கு சவால் விட்டு இருந்தார்.

அதிரடி கைது

இந்த நிலையில், கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பதுங்கியிருந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த அவரது நண்பர் ஷாம்அபிஷேக்கும் மீரா மிதுனோடு சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சேனலை முடக்க வேண்டும்

இந்த நிலையில், நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்கக் கோரி, யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here