உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை நலம் விசாரிக்க திடீரென சசிகலா வந்ததால் அங்கிருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.

சசிகலா வருகை

அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்திலிருந்து நேராக அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். மதுசூதனனின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, திடீரென சசிகலா மருத்துவமனைக்கு வந்தார்.

வெளியேறிய எடப்பாடி

அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் சசிகலா வந்துள்ள தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறினார். பின்னர் மருத்துவமனைக்குள் சென்ற சசிகலா நேராக மருத்துவர்களிடம் சென்று மதுசூதனன் உடல் நலத்தை விசாரித்தார். அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா மருத்துவமனைக்கு வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் அதே மருத்துவமனையில் உடனிருந்த சசிகலா அவரது மரணத்திற்கு பின் தற்போதுதான் முதன்முறையாக மதுசூதனனை பார்ப்பதற்கு அதே மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here