முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐதராபாத் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டனர். இருப்பினும் ஒருசில பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

சரத்குமாருக்கு கொரோனா

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராதிகா நம்பிக்கை

சரத்குமாருக்கு கொரோனா பாதித்துள்ள தகவலை அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராதிகா வெளியிட்டுள்ள பதிவில்; ”ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா உறுதியானது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவர்களின் கண்காணிப்பில் சரத்குமார் உள்ளார். வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டு வருவார்

சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; ”அப்பா, சரத்குமாருக்கு இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஹைதரபாத்தில் உள்ளார். அவர் சிறப்பாக நோய்த் தொற்றில் இருந்து மீண்டு  வருகிறார். தொடர்ந்து தகவல்களை பரிமாறிக் கொள்வேன்” என்று தெரிவித்தார்.

மக்கள் பணி

மிகச்சிறந்த நடிகரான சரத்குமார் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here