உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற எஸ்பிபிக்கு, திடீரென பாதிப்பு அதிகமானதையடுத்து, அவர் தீவிர சிகிச்ச பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் கலக்கமடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனையடுத்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனும், பாடகருமான எஸ்.பி. சரண் நாள்தோறும் தகவல்களை வெளியிட்டு வந்தார். தனது தந்தை நலம் பெறுவதற்கான நிலையை நோக்கி தொடர்ந்து சீராக முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், எக்மோ, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

உடல்நிலை மோசம்

கொரோனாவில் இருந்து உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அவரது உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்ரி மற்றும் மகன் சரண், மகள் பல்லவி ஆகியோருடன் இன்று காலை மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினர். மேலும் எஸ்.பி.பி.யை காண இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் மருத்துவமனை விரைந்தனர். இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உயிர் பிரிந்தது

இந்த நிலையில், கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பி. இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானதாக இயக்குநர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டார். அதன்பின் எஸ்.பி. பாலசுப்ரமணியன் மரணமடைந்ததாக அவரது மகன் எஸ்.பி. சரண் அறிவித்தார். மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று பிற்பகல் எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்ததாக கூறினார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1946 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். எஸ்.பி.பி. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

          

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here