இன்று பிறந்தநாள் கொண்டாடும் மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டிக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி நாயகன்

சினிமா வாழ்க்கையை மேடை நாடகம் மூலம் தொடங்கியவர் மம்முட்டி. கொஞ்ச காலம் மட்டுமே மேடை நாடகங்கள் செய்தார். அதன்பிறகு சினிமாவில் அவர் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் விஸ்வரூப வெற்றி பெற்றது. குறிப்பாக, ஆரம்ப காலத்தில் அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் மக்களின் மனதில் பிரம்மாண்ட ஆதரவைப் பெற்றது. ‘நியூ டெல்லி’ என்ற திரைப்படம் எத்தனை ஆண்டுகளானாலும் மம்முட்டி நடித்த படங்களிலேயே மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘தளபதி’ திரைப்படமும், அதில் அவர் பேசிய வசனங்களும், நட்பை பலப்படுத்தும் அந்த கதாபாத்திரமும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது. முன்னணி இயக்குநர்களான கே.பாலசந்தர், மணிரத்னம், ராஜீவ் மேனன், ராம் போன்றோரின், நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மம்முட்டி நடித்தது கூடுதல் பலம்.

மிகச்சிறந்த நடிகர்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் புகழின் உச்சத்தில் இருக்கும் போது, மம்முட்டியுடன் சேர்ந்து நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம், யாராலும் மறக்க முடியாது. ஐஸ்வர்யா ராய், மம்முட்டி என்ற அந்த ஜோடி, வயது வித்தியாசம் இருந்தாலும் ஒரு வித்தியாசமான காதல் உணர்வை ஏற்படுத்தி ரசிகர்கள் மனதில் தாக்கத்தை கொடுக்கும். அப்படியொரு எதார்த்த நாயகனாக மிக எளிதில் பலர் மனதை கொள்ளை அடித்தவர் மம்முட்டி. ‘மம்முக்கா’ என்று செல்லமாக மலையாள ரசிகர்களால் அழைக்கப்படும் மம்முட்டி, சினிமா மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சிறந்து விளங்கியவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சுதந்திரமாக தனது கருத்துக்களைச் சொல்வதில் மம்முட்டி தனித்துவம் பெற்றவர்.

குவியும் வாழ்த்து

மம்முட்டிக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். குறிப்பாக காரை மிகவும் வேகமாக ஓட்டிச் செல்வது சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று பல பேட்டிகளில் அவரே சொல்லியுள்ளார். பலமுறை தேசிய விருதுகளை பெற்றிருப்பதும், இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருப்பதும் மம்முட்டியின் அடையாளம். இத்தனை சிறப்புகளை கொண்ட நடிகர் மம்முட்டி, இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா மீது காதல் கொண்ட ஒரு உன்னத கலைஞன் மம்முட்டி, மென்மேலும் பல படங்களில் நடித்து வெற்றிகளை குவிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here