சில ஆண்டுகளாக சீரியலில் தலைகாட்டாமல் இருந்த நடிகை குஷ்பு தற்போது மீண்டும் சீரியலில் நடிப்பதை அறிந்த இல்லத்தரசிகள் குஷி அடைந்துள்ளனர்.
சிறந்த நடிகை
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போதிருக்கும் ஹீரோக்களுடனும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும், தனக்கென ஒரு கௌரவத்தையும் ஏற்படுத்தி நடிகையாக மட்டுமல்லாமல், அரசியலிலும் சாதித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களையும் தைரியமாக பேசி பதிவிடுகிறார்.
அழகு, பொலிவு
சினிமாவில் நடிக்க துவங்கிய நாள் முதல் இன்று வரை அதே அழகு, பொலிவுடன் இருக்கும் நடிகை குஷ்புவை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு பிஸியாகவே இன்றும் இருந்து வருகிறார் நடிகை குஷ்பு. தனது உடல் எடையை கணிசமாக குறைத்து வேற லெவல் மாஸ் காட்டி வருகிறார்.
மீண்டும் சீரியல்
வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்த நடிகை குஷ்புவிற்கு சின்னத்திரையிலும் வரவேற்பு கிடைத்தது. இவர் நடித்த நந்தினி, நிஜங்கள், லட்சுமி ஸ்டோர் ஆகிய சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர சில ஆண்டுகளாக சீரியலில் நடிக்காமல் இருந்த குஷ்பு தற்போது மீண்டும் சீரியலில் நடிப்பதற்கு களமிறங்கி உள்ளார். தற்போது ‘சரோஜினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் டிடி தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதற்கான படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.