தமிழகத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயங்க தொடங்கின. இருப்பினும் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே காணப்படுகிறது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நாடு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 4ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பேட்டரி, எரிபொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டனர்.

பேருந்து சேவை தொடக்கம்

இந்த நிலையில், தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை 5 மாதங்களுக்கு பிறகு இன்று துவங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 161 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை துவங்கியுள்ளது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாலும், பல பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

ஒரு இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதி என்ற அடிப்படையில், பேருந்துகளில் 22 முதல் 24 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவே பயணிகள் முண்டி அடித்துக்கொண்டோ, படிகளில் தொங்கியபடியோ பயணிக்க முடியாது. பயணிகள் பேருந்துகளில் பின்பக்கமாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும்போது பட்டிக்கட்டின் பக்கவாட்டில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும். பயணிகள் அந்த கிருமிநாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பேருந்துகள் பணிமனைகளில் இருந்து புறப்படும் போதும், இரவு பணிமனைக்கு வரும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என்றும், பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பேருந்து நிலையங்களில் வைத்து கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here