சுஷாந்த்தும் தானும் உண்மையாக காதலித்தோம் என்றும் எந்த சூழ்நிலையிலும் சுஷாந்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீங்கு நினைத்ததில்லை என்றும் நடிகை ரியா சக்ரபோர்த்தி வேதனையுடன் கூறியுள்ளார்.

விசாரணை தீவிரம்

பிரபல பாலிவுட் நடிகரான சுஷந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்திற்கு காதலி ரியா தான் காரணம் என்றும் அவரை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், சுஷாந்தின் பணத்தைப் அபகரித்ததுடன் தற்கொலை செய்யத் தூண்டினார் என்றும் சுஷாந்தின் தந்தை ரியா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற பாட்னா போலீசார், ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் சுஷாந்தின் பழைய மேனேஜர் ஸ்ருதி மோடி, சாமுவேல் போன்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால், தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்மை வெளியே வரும்

இந்த நிலையில், தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ரியா சக்ரபோர்த்தி சுஷாந்த் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; யாராக இருந்தாலும் இந்த பெரிய இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது. நான் அவரது மகனை நேர்மையாக நேசித்தேன். அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். தயவு செய்து கொஞ்சமாவது மனித நேயத்துடன் நடந்துகொள்ளுங்கள். எனக்காக இல்லை என்றாலும், மறைந்த சுஷாந்த்தை மனதில் வைத்துகொண்டு கொஞ்சம் அனுதாபத்தை காட்டுங்கள். என் மீது குற்றம் சாட்டினால், எதற்காக என் குடும்பத்தை டார்கெட் செய்ய வேண்டும். யார் உண்மையான கொலையாளி என்ற உண்மை கண்டிப்பாக வெளியே வரும். முடிவுக்காக ஏன் யாரும் பொறுமையாக இருப்பதில்லை. அந்த உண்மைக்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம். நான் கைது செய்யப்படுவேன் என்று யாரும் கனவில் கூட நினைக்காதீர்கள். அந்த அளவிற்கு நான் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை.

போதைக்கு அடிமை இல்லை

நான் போதைப் பொருட்களுக்கு அடிமை இல்லை. அதை வாங்கியதும் இல்லை, பயன்படுத்தியதும் இல்லை. சுஷாந்த் மரிஜுவானா என்ற போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தார். நான் அவரை கட்டுப்படுத்த முடிந்தவரை முயன்றேன். மக்கள் அனைவரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறுவதற்கு முன்பே நான் சிபிஐக்கு மாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். உங்கள் அனைவரின் ஒரு பக்க நியாயம் ஒரு குடும்பத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. நான் பார்த்துப் பழகிய மனிதர்களில் சுஷாந்த் மட்டுமே உண்மையானவர், நேர்மையானவர். அவரைப் போல் ஒரு மனிதரை எப்பொழுதும் நான் சந்தித்ததே இல்லை. எனக்கு அவர் நல்லதையே சொல்வார். எனக்காக அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார். அவர் இல்லை என்ற செய்தி என்னை மிகவும் வாட்டி கொண்டிருக்கின்றது. சுஷாந்த்தை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். அவரை உண்மையாக காதலிப்பதற்கு அனைவரும் எனக்கு கொடுக்கும் பரிசு இதுதானா? எது எப்படி இருந்தாலும் எனக்கு கண்டிப்பாக நியாயம் வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன். நாங்கள் இருவரும் உண்மையாகவே நேசித்தோம், உண்மையாகவே வாழ்ந்தோம். சுஷாந்தின் குடும்பத்தினர் மனித நேயத்துடனும், கருனையுடனும் நடந்துகொள்ள வேண்டும். இப்படி அநியாயமாக ஒரு குடும்பத்தின் மீதும், என் மீதும் பழி போடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ரியா சக்ரபோர்த்தி கூறியுள்ளார்.

இலக்கு வைத்து விசாரணை

சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முன்னதாகவே, அதிகாரிகளிடம் கூற வேண்டிய தகவல்களை, ஊடகங்களிடம் ரியா கசியச் செய்திருப்பதாக வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து மும்பையிலும் பாட்னாவிலும் நடக்கும் முன்னேற்றங்களுக்கு மத்தியில் இந்த வழக்கில் ரியா சக்ரபர்த்திக்கு நெருக்கமானவர்களை இலக்கு வைத்து சிபிஐ தனது விசாரணை வளையத்தை இறுக்கி வருகிறது. இதனால், இந்த வழக்கில் அடுத்த வரும் நாட்களில் பல முக்கிய திருப்பத்தை எதிர்பார்க்கிறோம் என்று டெல்லி சிபிஐ தலைமையகத்தில் உள்ள உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here