கைலாசாவில் உணவகம் அமைக்க நித்தியானந்தாவிடம் அனுமதி கேட்டிருந்த மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘கைலாசா’

இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பாக பேச தொடங்கியுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பியுள்ள அவர், தனது ருத்ர கன்னிகளுடன் சேர்ந்து தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கிறார். அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வந்தாலும், அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், கும்பலாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை அவரது ருத்ர கன்னிகளும் வெளியிட்டு வருகின்றனர். பெங்களூரு போலீசார் அவரை தேடி வரும் நிலையில், சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நித்தியானந்தா, தனது கைலாசா நாட்டிற்கு அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழை அறிவித்துள்ளார். மேலும் கைலாசா நாட்டுக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) நித்தியானந்தா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்ட நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், கைலாசா எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கவில்லை.

கைலாசாவில் ஹோட்டல்?

இந்நிலையில், கைலாசாவில் ஹோட்டல் அமைக்க அனுமதி வழங்குமாறு மதுரையை சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான குமார், நித்தியானந்தாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சத்சங்கில் தோன்றிய நித்தியானந்தா, மதுரை ஹோட்டல் உரிமையாளருக்கு பதிலளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கைலாசாவில் ஹோட்டல் அமைக்க அனுமதி கோரிய மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கைலாசாவில் தொழில் தொடங்க திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

ஆட்சியரிடம் புகார்

இந்த நிலையில், அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளிக்கு ஆதரவு தருவதாகவும், நித்யானந்தாவை நல்லவர் போல காட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் கூறி, ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here