மத்திய அரசு கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றியே தமிழகத்தில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஆண்டுதோறும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அப்போது பக்தர்கள் அதிகளவில் திரண்டு விநாயகப் பெருமானை வணங்குவர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து மத பண்டிகைகள், விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது போல், மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதேபோல ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை.

டாஸ்மாக் மட்டும் திறக்கமாலா?

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த இந்து முன்னணியினர், தடையை மீறி கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சிலை வைத்து வழிபடுவோம் என்று கூறியுள்ளனர். இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடு என அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிப்பதாக கூறினார். டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி தந்த தமிழக அரசு, விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? என்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவே அனுமதி கோருகிறோம், ஊர்வலத்திற்கு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்

இதனிடையே, வேலூரில் கொரோனா ஆய்வுப்பணிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றியே மத ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றும் அதனை தமிழக அரசு பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அப்போது கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here