தனது அரை நிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட வழக்கில் சமூகச் செயற்பாட்டாளர் ரெஹனா பாத்திமா முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரை நிர்வாண ஓவியம்

கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், ரெஹானா பாத்திமா பணியாற்றிய பிஎஸ்என்எல் நிறுவனம், அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து வேலையை விட்டு நீக்கியது. இந்த சூழலில் தனது சிறு குழந்தைகளை, தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, உடலும் மற்றும் அரசியலும் என்ற தலைப்பில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் ரெஹானா பாத்திமா. ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட இந்த வீடியோ கேரளாவில் வைரலானது. அதேசமயம், எதிர்ப்பும் கிளம்பியது. குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தை பாலியல் சீண்டல்கள் என்று பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

புகார், வழக்குப்பதிவு

இதையடுத்து, பத்திணம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் ஏ.வி. அருண் பிரகாஷ், ரெஹானா பாத்திமா மீது திருவல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த விவகாரத்தை மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சிறார் நீதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த மாதம் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

மனு தள்ளுபடி

இந்த மனு இன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்; என்ன மாதிரியான வழக்கு எங்களிடம் வந்திருக்கிறது. மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்காலம். ஆனால், இதுபோன்ற செயல்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. இந்திய தேசத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து ரெஹானா பாத்திமா என்ன மாதிரியான தாக்கத்தை தனது குழந்தைகளுக்கு அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் கற்றுக்கொடுக்கப் போகிறார். சமூகத்தின் மோசமான ரசனையாக இருக்கிறது. இந்த மனுவின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் விரிவாகப் பரிசீலித்துவிட்டது. ஆதலால், மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here