OTT தளத்திற்காக படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் அதனை தானே இயக்கி, நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவின் அதிசயம்

சினிமா உலகின் அதிசயம் என்றால் அது பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் தான். புது முயற்சிகளுக்கும், புதிய படைப்புகளுக்கும் எப்பொழுதும் பஞ்சம் வைக்காதவர். யதார்த்தமான நடிப்பும், பேச்சுத் திறமையும் அவரிடம் இருப்பதால் சினிமாவில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் கால்பதித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பெண்களே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அவ்வை சண்முகி படத்தில் அழகான பெண்ணாகவே மாறி இருந்தார். நாயகன், அபூர்வ சகோதரர்கள், பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற யதார்த்த படைப்புகளைத் தந்த கமல்ஹாசன், தனக்கென்று ஒரு நண்பர் வட்டாரத்தை வைத்துள்ளார். அவரின் படத்தில் அவரது நண்பர் கூட்டமே அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு எழுத்திலும், இயக்கத்திலும் சிறந்த படைப்பாளியாகவே அவர் திகழ்ந்து வருகிறார்.

சலிக்காத கமல்

கமல்ஹாசனின் படைப்புகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு என்பதே வராது. அந்த அளவிற்கு பெரிய பிரம்மாண்டத்தை உருவாக்கியவர் கமல். அவர் படைப்புகளில் முக்கியமாக திரும்பிப் பார்க்கக்கூடிய படம் என்றால் தசாவதாரம், விஸ்வரூபம் படங்களை கண்டிப்பாக கூறலாம். தசாவதாரம் படத்தில் அவர் நடித்த பத்து வேடங்களும் அது கமல்தானா என்று வியக்கும் அளவிற்கு இருந்தது. எப்பொழுதும் புது முயற்சியை கொடுத்து வரும் கமல்ஹாசன், மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக மடிக்கணினியை அறிமுகம் செய்தவர். அப்படத்திற்கு முன் வந்த எந்த திரைப்படங்களிலும் மடிக்கணினி என்பது பயன்படுத்தாமலேயே இருந்தது. வெளிநாட்டிற்கு சென்றிருந்தபோது ஒரு மடிக்கணினியை வாங்கி வந்த அவர், அதனை எப்படியாவது அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கில், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு காட்சியில் மடிக்கணினியை பயன்படுத்தினார். அதன்பிறகே அனைவராலும் பேசப்பட்டது மடிக்கணினி.

எப்போதோ சொன்ன OTT

பல ஆண்டுகளுக்கு முன்பே OTT தளத்தில் திரைப்படங்களை வெளியிடலாம் என்று அவர் கருத்து கூறியதற்கு, எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் இன்று பல படங்கள் OTTயில் வெளியாகி இருக்கின்றன. தனது சொந்த முயற்சியால் கொடுத்த விஷயத்தை பயன்படுத்த தவறிய சினிமாத்துறை, இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் அதனை செய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனும் OTT தளத்திற்கான சில படங்களை, தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது. இதற்காக கமல் கதை கேட்டு வருவதாகவும், அவருக்கு ஏற்ற கதைகள் ஏதாவது அமைந்தால் தானே இயக்கி, நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here