விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான ஜூலை 24ம் தேதி அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

பன்முகத்திறமை

சினிமாத் துறையில் நிலைத்து நிற்பதே கடினமாக இருக்கும் இந்த போட்டி நிறைந்த சூழ்நிலையில், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ்பெற்றவர் விஜய் ஆண்டனி. 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படம், ஆந்திராவிலும் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆண்டனி. ‘நான்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்கள் சரியான வரவேற்பை பெறாததால், வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். அந்த சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது “பிச்சைக்காரன்”.

தொடர் தோல்வி

சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன், கொலைகாரன் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. ஆனால் விடா முயற்சியுடனும், ஆழ்ந்த அர்பணிப்புடனும் களம் காணும் விஜய் ஆன்டனியின் ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், அவரது பிறந்த நாளான ஜூலை 24ஆம் தேதி புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம், உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது; 2021ஆம் ஆண்டு திரையுலகுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. நேர்மறையான கருத்துக்களையே என் படங்களில் எப்போதும் நான் வலியுறுத்துவது வழக்கம். இந்தப் படமும் அப்படியே அமைந்திருக்கும். படத்தை இயக்குவது குறித்து மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்த அறிவிப்பு கண்டிப்பாக ஆச்சரியம் மிக்கதாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு சற்றே காத்திருங்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வரும் விஜய் ஆண்டனி, ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here