தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிறப்பு மருத்துவமனை

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட உள்ள இந்த சிறப்பு மருத்துவமனையில், 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளை முதல் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீவிர நடவடிக்கை

இந்த மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக்கூடம், வைபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளதாக தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடிவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவையான அளவு வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை

சென்னையில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மூலமாக தொற்று குறைந்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர், அரசு எடுத்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் கூறினார். ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி எனவும் நோயை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டியுள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை எனக்கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here