சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார் என்று வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

சிறையில் சசிகலா

ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்கூட்டியே விடுதலையா?

இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 14ம் தேதி தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஆனால், இதனை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவது குறித்த எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து சுதந்திர தினத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் பின்னர் அந்த முடிவின் அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு ஆளுநர் ஒப்பதல் வழங்கிய பிறகே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார் என்று எப்போதும் போலவே தற்போதும் வதந்தி பரவியதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here