‘ஓ’ குரூப் இரத்த வகை கொண்டவர்களை கொரோனா தாக்காது என்று வெளிவந்திருக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வை முழுமையாக ஏற்க முடியாது என்று இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

‘ஓ’ வகை இரத்தம்

23 and Me என்ற அமெரிக்க மரபணு ஆய்வு நிறுவனம் கிட்டத்தட்ட ஏழரை லட்சம் பேரின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்த வகையில் ‘ஓ’ ரத்த வகையினரை covid-19  தாக்குவது குறைவாக இருக்கின்றது என தெரிவித்துள்ளது. இந்த செய்தி பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஓ’ ரத்த வகை இருந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பது போன்ற கருத்துக்கள் பரவலாக பரிமாறப்பட்டு வந்த நிலையில், இந்திய மருத்துவர்கள் இந்த ஆய்வை முழுமையாக ஏற்பதற்கு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு குறைவு?

இந்த ஆய்வை நடத்திய 23 and me  நிறுவனம், மற்ற ரத்த வகையினரை ஒப்பிடுகிறபோது ‘ஒ’ பிரிவைச் சேர்ந்தவர்களை  கொரோனா தாக்குவது 9 முதல் 18 சதவீத அளவில் மட்டுமே இருப்பதாகவும், ஏழரை லட்சம் பேரின் ரத்த மாதிரிகளை சோதித்த பிறகு இந்த முடிவுக்கு வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த பரிசோதனை ஒரு முதல்கட்ட ஆய்வுதான் என்றும் ஒரு தெளிவான முடிவுக்கு இன்னும் வர முடியவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

‘ஏ’ வகையினரை அதிகம் தாக்கும்

அதேபோல, இந்த ஆய்வு இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் தெரிவிக்கிறது. நீங்கள் ‘ஏ’ வகை இரத்த பிரிவினர் ஆக இருந்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதுதான். அந்த தகவல் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை சோதித்தபோது, அவர்களில் 50 சதவீதத்தினர் ‘ஏ’ ரத்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.  

இந்திய மருத்துவர்கள் மறுப்பு

ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த ஆய்வு, கொரோனா பரவலுக்கு மரபணு ரீதியாக ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறது. இதுமட்டுமல்லாமல் நோய்தொற்று தொடர்பாக இருக்கும் பல்வேறு குழப்பங்களுக்கும் பதில் பெற இந்த ஆய்வு முயற்சி செய்கிறது. குறிப்பாக சிலருக்கு ஏன் கொரோனா தொற்று இருந்தும் அறிகுறிகள் ஏற்படுவது இல்லை?  சிலருக்கு உயிர்கொல்லி நோய் போல செயல்படும் கொரோனா வைரஸ் சிலருக்கு அவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை என்பதற்கான காரணம் என்ன என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கான பதிலை இந்த ஆய்வின் மூலம் பெற முயற்சி செய்து  வருகின்றனர். இந்த ஆய்வின் தரவுகளை முழுமையாக ஏற்க முடியாது என இந்திய மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். காரணம், இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை குறைவு என்றும் அவர்கள் சொல்லும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொண்டு ‘ஒ’ குரூப் இரத்த வகை கொண்டவர்கள் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என்றும் இந்திய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here