தனுஷ் இயக்கி நடிக்கும் வரலாற்று படம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் அதை மீண்டும் துவங்க அவர் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனரான தனுஷ்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் ஆங்கிலத்தில் ஒரு படம் நடித்துள்ளார் அவர். இவ்வளவு உயரங்களைத் தொட்ட தனுஷ் நடிப்பது மட்டுமின்றி இயக்குவது, பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்கிறார். தனுஷ் பா பாண்டி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். 2017ம் ஆண்டு வெளியான இந்தப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2வது படம்

அதன்பின் 2017 இறுதியில் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது படம் அறிவிக்கப்பட்டது. நான் ருத்ரன் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. அதில் நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் என பலர் நடிக்கவிருந்தனர்.

மீண்டும் தொடக்கம்?

அதிக பட்ஜெட்டில் வரலாற்று படமாக உருவாக இருந்த இதன் ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் நடைபெற்ற நிலையில், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா முழு அடைப்பு காரணமாக வீட்டிலேயே இருக்கும் தனுஷ், நிறுத்தப்பட்ட அந்த படத்தை மீண்டும் துவங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

இயக்குனராக தனுஷின் இரண்டாவது படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தனுஷ் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. அதில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் முழுமையாக முடிந்து விட்டதையடுத்து, மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here