கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஹைட்ராக்சி குளோரோக்வின்

மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரை, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும் என்று நம்பப்பட்டது. இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு இந்த ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. அமெரிக்கா கூட இந்த மாத்திரை நல்ல பலன் தருவதாக தெரிவித்திருந்தது.

பல நாடுகள் இறக்குமதி

இதனால் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோக்வின் வழங்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. உலகின் பல நாடுகள் இந்த மாத்திரையை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துகொண்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகளை இந்தியா அமெரிக்காவுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என்று மிரட்டிய செய்தி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

இறப்பு விகிதம் அதிகம்

இந்நிலையில் மருத்துவத்துறையில் பிரபலமான தி லான்செட் மருத்துவ இதழ் ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகள் வழங்குவது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த மாத்திரை புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அவர்களின் இறப்பு விகிதம் அதிகமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 15 ஆயிரம் பேருக்கு ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகள் தனியாகவோ அல்லது ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உடன் சேர்த்து வழங்கப்பட்டது. அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டவர்களில் 18 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மற்ற மருத்துவ நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகிறபோது அதிகமானது ஆகும் எனத் தெரிய வந்துள்ளது.

அதிரடி நடவடிக்கை

இதனைத்தொடர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள், இது இறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் என்கிற காரணத்தால், தொடு சிகிச்சையில் ஹைட்ராக்சி குளோரோக்வின் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர். இந்த பரிந்துரையை ஏற்று, உலக சுகாதார நிறுவனம் ஹைட்ராக்சி குளோரோக்வின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்தக்கூடாது என்று அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here