நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

வெற்றி இயக்குநர்

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், தரணி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். பிரகாஷ்ராஜ், தாமு, மயில்சாமி, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையில் கில்லி இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது. இந்த திரைப்படம் விஜய்யின் கேரியருக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்று இருந்த ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சூப்பர் ஜோடி

நடிகர் விக்ரமை வைத்து தில், தூள் என இரண்டு ஹிட் படங்களை அடுத்து அடுத்து கொடுத்ததால், இயக்குநர் தரணி மூன்றாவது முறையாக விக்ரமுடன் தான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு விஜய்யுடன் இணைந்தார் தரணி. கில்லி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதால், 2008 ஆம் ஆண்டு குருவி படத்தை இயக்கினார் தரணி. ஆனால் குருவி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதன்பிறகு விஜயும் திரிஷாவும் இணைந்து திருப்பாச்சி, ஆதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்கள். தற்போது லியோ படத்தில் அதே ஜோடி இணைந்துள்ளது.

சிறந்த வில்லன்

கில்லி படத்தில் திரிஷாவின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனாலேயே விஜய் – சிம்ரன் ஜோடிக்கு பிறகு விஜய் – திரிஷா ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கில்லி படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரகாஷ் ராஜின் நடிப்பும், அவரது வசனமும் இன்றும் பலருக்கு ஃபேவரைட் வசனமாக இருக்கின்றது. விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் சிவகாசி, போக்கிரி, வில்லு, வாரிசு உள்ளிட்ட பல படங்களில் விஜய்க்கு வில்லனாகவே பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த கில்லி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதை தொடர்ந்து ரசிகர்கள் இணையதளத்தில் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here