சூரி ஹீரோவாக நடித்து வெளியான விடுதலை திரைப்படத்தின் வசூல் 11 நாட்களில் ரூ.40 கோடியை நெருங்கியுள்ளது.

ஹீரோவான சூரி

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சூரி. முதல் படத்திலேயே பல ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட நடிகர் சூரி, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். காமெடி நடிகராக இதுவரை இருந்து வந்த சூரி, தற்போது விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை தழுவி உருவாக்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியான டாப் ஹீரோக்களின் படங்களைவிட நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் வசூலையும் வாரி குவித்து வருகின்றது.

வசூல் வேட்டை

விடுதலைப் படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நாயகியாக ஜிவி பிரகாஷின் தங்கை அறிமுகம் ஆகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலை திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் ஆனதை தொடர்ந்து, இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தற்போது சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 31 ஆம் தேதி வெளியான விடுதலை திரைப்படம், 11 நாட்களில் ரூ.39 கோடி வசூல் ஈட்டி உள்ளது. இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருப்பதால் கூடிய விரைவில் ரூ.50 கோடியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here