தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்

மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் தொடர்பாக பேரவையில் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆளுநர் ரவிக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் ஏமாளிகள் அல்ல

தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும். நாள்தோறும் கூட்டங்கள் நடத்தி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. மக்கள் நலனுக்காக கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் பேரவை வருந்துகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு மத்திய அரசு காலம் நிர்ணயம் செய்ய வேண்டும்”. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here