தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என வரலக்ஷ்மி கூறும்போது அவருக்கு திருமணம் செய்து வைப்பேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வாய்ப்பு

2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் போடா போடி. இந்த படத்தின் மூலம் வரலக்ஷ்மி சரத்குமார் திரையுலகிற்கு அறிமுகமானார். சிம்புவுக்கு ஜோடியாக நடித்த வரலக்ஷ்மி முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார் நடிகை வரலக்ஷ்மி. தற்போது கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டிரெய்லர் வெளியீடு

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை வரலஷ்மி பேசியதாவது; “இந்த படத்தில் நடிக்க நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்டேன். அருமையான கதை, எனது கெரியரில் வித்தியாசமான படமாக இருக்கும்” என்றார். கொன்றால் பாவம் திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அவர் விருப்பம்

கொன்றால் பாவம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு உள்ளிட்டோர் பங்கேற்றனர். படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள சரத்குமார் பேசுகையில்; “எதுவும் சிறிய படம் பெரிய படம் என்றெல்லாம் கிடையாது. எந்த திரைப்படம் வெற்றி அடைகிறதோ, அதுதான் பெரிய படம். நான் நடித்த சூர்யவம்சம் திரைப்படமும் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதெல்லாம் ஒரு படமா என்று பலரும் கேட்டனர். ஆனால் அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுபோல் தான் கொன்றால் பாவம் படம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.

கட்டாயப்படுத்த மாட்டேன்

எனது மகள் வரலட்சுமியை பார்த்தால் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவரை அவரே உருவாக்கிக் கொண்டார். யாரும் அவருக்கு உதவி செய்யவில்லை என்பது தான் உண்மை” என்று உருக்கமாக பேசியிருந்தார். வரலக்ஷ்மியின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது வரலக்ஷ்மியின் விருப்பம். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன். தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என வரலக்ஷ்மி வந்து என்னிடம் கூறும்போது, அவருக்கு திருமணம் செய்து வைப்பேன்” என சரத்குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here