அம்மாவுடைய தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்தி வெற்றி பெற முடியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

மதுரை கோச்சடை பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவு. மருங்காபுரி மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மட்டும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். தேர்தல் வாக்குறுதி குறித்து வார்த்தை ஜாலம்தான் ஸ்டாலின் பேசி வருகிறார். விடியல் அரசு என சொல்லிவிட்டு விடியாத அரசாக இருக்கிறது. இடைத்தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசம் ஒன்றும் பெரியது இல்லை. இதே தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும். சட்டமன்றத் தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இடைத்தேர்தல் என்பது ஒரு இடைதேர்தல் மட்டும்தான்.

ஏன் கோட்டை விட்டீர்கள்?

பழனிசாமி என்ற மனிதர் அவரை சேர்ந்த சிலர் ஆணவம், அகம்பாவம், ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் கிடைத்த பணத்தின் காரணமாக திமிர் ஆகியவற்றால், மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். ஆனால் கலகலத்து போகியுள்ளது. எடப்பாடி தரப்பும் திமுகவிற்கு இணையாக பணமும், பொருட்செலவும் செய்தும்கூட தேர்தலில் வெற்றிபெற இயலவில்லை. இந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். தனி சின்னத்தில் நின்று இருந்தால் பெரும் மோசமாகி இருக்கும். பழனிச்சாமி சிலரை வசப்படுத்தி வைத்துள்ளார், கட்சியின் தலைமை பதவியை வகிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. தவறான பாதையில் தவறான மனிதராக இருக்கிறார். இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும். 2500 பேரை வசப்படுத்தி தொண்டர்கள் என் பின்னால் என சொல்கிறார், அவர் உண்மையான தலைவர் இல்லை. ஈரோடு பகுதியை கோட்டை என கூறிவிட்டு ஏன் கோட்டை விட்டார்கள்? 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். வருங்காலத்தில் அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த, அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். இதற்கு ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம், அந்த சுயநலம் உடைத்து எறியப்படும்.

காலம் தீர்வு தரும்

திமுக தங்கள் அரசியல் லாபத்திற்காக கருணாநிதி காலத்தில் இருந்தே ராஜதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்கள். அரசியலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அம்மாவுடைய தொண்டர்கள் ஒருங்கிணைந்தால் காலம் அதற்கு தீர்வு தரும். தேர்தல் கூட்டணி பற்றி நவம்பர், டிசம்பரில் முடிவு செய்வோம். அம்மாவின் பாதையில் இருந்து மாரி தவறான கொள்கைக்கு சென்றதன் காரணமாக தொடங்கப்பட்ட இயக்கம் அமமுக. நாங்கள் பழனிச்சாமி தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை”. இவ்வாரு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here