ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 59.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆன்ந்த் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்கு சேகரித்தனர். அதேபோல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

பெண்களே அதிகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதேப்போல் இளைஞர்கள், முதியவர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கருங்கல்பாளையம் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் 75 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.

விறு விறு வாக்குப்பதிவு

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி நிலவரப்படி முதல் 2 மணி நேரத்தில் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. காலை 11 மணி நேர நிலவரப்படி 27.89 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 49 ஆயிரத்து 740 ஆண்களும், 54 ஆயிரத்து 749 பெண்களும் வாக்களித்து உள்ளனர். தற்போது பிற்பகல் 3  மணி நிலவரப்படி ஆண்களைவிட 4,000 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். இதுவரை 59.28 சதவீத சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போதைய வாக்குப்பதிவு வேகம் தொடர்ந்தால் கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகும் என தகவல் கூறப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இருந்தவாறு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பார்வையிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here