ரோகித் சர்மா போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது, அவரால் என்னை போல் நடனம் ஆட முடியாது என்று மிர்ச்சி சிவா நகைச்சுவையாக கூறியுள்ளார்.

காமெடி நாயகன்

சென்னை 600028 படத்தின் மூலம் பிரபலமான மிர்ச்சி சிவா, சரோஜா, தமிழ் படம், வணக்கம் சென்னை, மசாலா படம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். காமெடி படம் என்றாலே நாம் நினைவுக்கு வரும் சில நடிகர்களில் மிர்ச்சி சிவாவும் ஒருவர். தற்போது இவர் அறிமுக இயக்குநரான விக்னேஷ் ஷா பி.என் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில், மேகா ஆகாஷ், அஞ்சு குரியன் நடித்திருக்கின்றனர். பிரபல பாடகரான மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

நாளை ரிலீஸ்

ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானலில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நான் அவர் அல்ல

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பாடகரும், நடிகருமான மனோ கலந்துகொண்டு பேசுகையில்; நான் மிர்ச்சி சிவாவின் ரசிகன், எனது பாடல்களுக்கு அவர் ரசிகர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிவாவுக்கு நன்றி” என்றார். வழக்கம்போல் கலகலகப்பாக பேசிய நடிகர் சிவா “கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் தொடங்கிய படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” இந்த கதையை கேட்ட உடனே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக இது ஒரு பீல் குட் படமாக இருக்கும். இந்த கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அதுமட்டும் இல்லாமல் பல பேர் என்னை கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா போல் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் ரோகித் சர்மா போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது அவரால் என்னை போல் நடனம் ஆட முடியாது என்று நகைச்சுவையாக கூறினார். “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here