மிகப்பெரிய ‘மாண்டாஸ்’ புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேரோடு சாய்ந்த மரங்கள்

வங்கக் கடலில் உருவான ‘மாண்டாஸ்’ புயல் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. ‘மாண்டாஸ்’ புயல் காரணமாக சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், 10-க்க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களும் விழுந்தன. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினர். அதேபோல் மின்வாரிய ஊழியர்களும் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கைகாளை மேற்கொண்டனர். புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. சேதமடைந்த சில இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

முழு வீச்சில் நிவாரணப் பணி

‘மாண்டாஸ்’ புயல் காரணமாக சென்னை காசிமேட்டில் 100 படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. சுமார் 50 படகுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காசிமேட்டில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது; ‘மாண்டாஸ்’ புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மிகப்பெரிய ‘மாண்டாஸ்’ புயல் தாக்குதலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டு இருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை; மரங்கள் அகற்றும் பணிகள் மட்டும் நடக்கிறது. புயலால் விழுந்த மரங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக அகற்றி உள்ளனர். திட்டமிட்டு செயல்பட்டதால் பாதிப்புகள் குறைவாக இருந்தன.

பாராட்டு

‘மாண்டாஸ்’ புயலில் விடிய விடிய பணியில் இருந்து அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்கள். காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மீட்பு பணி நடந்து வருகிறது. 25,000 பணியாளர்கள் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். சேதமான விசைப்படகுகள் கணக்கெடுக்கப்பட்டு, விரைவில் நிவாரணம் வழங்கப்படும். மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்பட்டால் வெளிமாவட்டங்களில் ஆய்வு செய்வேன். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Ads by

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here