சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 10 – 12 தேதிகளில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (10.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதிக கனமழை பெய்யும்

நாளை (11.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான – கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

பரவலாக மழை

கடந்த 24 மணி நேரத்தில் திரு நெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீ., தக்கலை (கன்னியாகுமரி), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவாடானை (இராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சிவலோகம் (கன்னியாகுமரி), கொடுமுடி (ஈரோடு), கன்னியாகுமரி தலா 2 செ.மீ., மணிமுத்தாறு (திருநெல்வேலி), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), பொன்னேரி (திருவள்ளூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), நாங்குநேரி (திருநெல்வேலி), பாம்பன் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), புதுச்சேரி, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), வானூர் (விழுப்புரம்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பெரம்பலூர், வாலினோகம் (இராமநாதபுரம்), கலவை (ராணிப்பேட்டை) தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here