நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
8 மாவட்டங்களில் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாளை வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அவலாஞ்சி, மேல் பவானி, தேவாலா, கூடலூர் பஜார், பந்தலூர் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் தலா 19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் வேகத்தில் சூறாவளிக் காற்றும், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.