சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத்தான் காரணம் எனவும் வழக்கை திசை திருப்ப அவர் முயற்சித்து வருவதாகவும் சித்ராவின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பேரதிர்ச்சி

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் முல்லை கதாபாத்திரன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கொள்ளையடித்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சித்ராவின் மரணம் சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி வெள்ளித்திரை நட்சத்திரங்களிடமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறையில் அடைப்பு

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு 2021-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி ஹேம்நாத் ஜாமினில் வெளியே வந்தார். சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சித்ராவின் தற்கொலைக்கு காரணம் முன்னாள் அமைச்சர்கள் எனவும் மாபியா கும்பலிடம் தனக்கு தெரிந்த நபர்கள் பணம் பறிக்க முயற்சிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். எல்லாவற்றிற்கும் தான் தான் காரணம் என பலர் தவறாக கருதுவதாகவும் ஹேம்நாத் அதில் கூறியிருந்தார்.

பெற்றோர் மறுப்பு

இதற்கிடையே, ஹேம்நாத் வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாய் மற்றும் தந்தை கூறியதாவது; என் மகள் தைரியமான பெண். ஹேம்நாத் அவளை கோழையாக்கிவிட்டார். என் மகள் தற்கொலை செய்துகொண்டால் என்று நாங்கள் நம்ப மாட்டோம். அவளை ஹேம்நாத் கொன்றுவிட்டார். புதிதாக சித்ராவின் மரணத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் இருப்பதாக கூறி வழக்கை திசை திருப்பி தப்பிக்க, ஹேம்நாத் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மகள் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக ஆட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாறியதும்  நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வரை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் அங்கு தனிப்பிரிவில் புகார் அளியுங்கள் என்று கூறினர். போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட பல இடங்களில் புகார் அளித்தும் பயனில்லை. என் மகளுக்கு நடந்த கொடுமைபோல், வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. அதனால் போலீசார் விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர வேண்டும். இவ்வாறு சித்ராவின் பெற்றோர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here