டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

டெல்லியில் வரவேற்பு

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செல்லவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததால் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உட்பட அதிகாரிகள் சென்றனர். டெல்லி சென்றடைந்த முதலமைச்சரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமருடன் சந்திப்பு

பின்னர் தமிழக இல்லம் சென்றடைந்த முதலமைச்சர், மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகம் சார்பில் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிற அடிப்படையில் மத்திய அரசுடனான உறவு இருக்கும் என்றார். பிரதமரிடம் தாம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

சோனியாவுடன் சந்திப்பு

இதனையடுத்து இடதுசாரிக்கட்சித் தலைவர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்தார். அப்போது சோனியாவுக்கு புத்தகம் ஒன்றை ஸ்டாலின் பரிசளித்தார். முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக சோனியா மற்றும் ராகுலை ஸ்டாலின் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here