பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர் பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மிகச்சிறந்த நடிகர்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக். தனது நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களையும் தொடர்ந்து பேசி வந்ததால் ‘சின்ன கலைவாணர்’ என்ற பெயரைப் பெற்றார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விவேக், 2000-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள விவேக், பத்ம ஸ்ரீ விருதையும், சிறந்த நகைச்சுவை நடிகருக்காக 5 முறை மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மீது தீவிர பற்று கொண்டிருந்த அவர், மாணவர்களை திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றினார்.

விவேக் மரணம்

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த விவேக்கிற்கு நேற்று காலை திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. பின்னர் மயக்க நிலைக்கு சென்ற அவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இதய செயல்பாடு குறைந்ததால் எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். விவேக் மறைந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

சமூகத்திற்காக குரல் கொடுத்தவர்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனையடைய செய்துள்ளது. விவேக்கின் காமெடி நடிப்பும், வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தன. தனது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக். படங்கள், சொந்த வாழ்க்கை மூலம் சுற்றுச்சூழல், சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் நடிகர் விவேக். விவேக்கின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய இழப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் விவேக். கலை சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு. பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு, திரைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். நடிகர் விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர் நடிகர் விவேக். அவரது இழப்பு அனைவருக்கும் பேரிழப்பு என கூறி உள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துக்கொண்டதோ?. இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், நடிகர் விவேக்கின் மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தகனம்

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை சென்னை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுவதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here