குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அவலாஞ்சி, பந்தலூரில் தலா 11 செ.மீ., சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட் தலா 9 செ.மீ., வால்பாறை 8 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, சோலையாறு தலா 7 செ.மீ., வால்பாறை, பரம்பிக்குளம், மேல் பவானி தலா 6 செ.மீ., நாகர்கோவில், தக்கலை, கொட்டாரம் தலா 5 செ.மீ., குழித்துறை, இரணியல், கன்னிமார், சூரலாக்கோடு, பெருஞ்சாணி, சித்தாறு தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.