விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் OTTயில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

‘மாஸ்டர்’

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். ‘தளபதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய், தனது அசாத்தியமான நடிப்பு, நடனம் போன்றவைகளால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “மாஸ்டர்” திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மகேந்திரன், அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என தெரியாததால், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக OTTயில் வெளியிடப்படுகின்றன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் OTT தளத்தில் வெளியான நிலையில், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் OTTயில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ‘மாஸ்டர்’ திரைப்படமும் OTTயில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

OTTயில் ரிலீஸ்?

இந்த நிலையில், ‘மாஸ்டர்’ திரைப்படம் OTTயில் வெளியாக வாய்ப்பில்லை என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில், ‘மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஏழை – எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் OTTயில் வெளியாக வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்த பின்னர், திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here