இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் பிரபல காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காமெடிக்கு முக்கியத்துவம்

ஒரு திரைப்படத்தில் சென்டிமென்ட், காதல், ரொமான்ஸ், சண்டைக் காட்சி என எல்லாம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட படத்திற்கு முக்கிய பலத்தை சேர்ப்பது காமெடி. முழுநீள ஆக்ஷன் படமாகவோ அல்லது காதல் படமாகவோ இருந்தால் கூட பார்க்கும் ரசிகர்களை சலிப்படையச் செய்யும். ஆனால் காமெடி படம் என்றால், அதற்கு ஈடு இணையே கிடையாது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் காமெடிக்கும், சிரிப்புக்கும் அடிமை தான். அந்த வகையில், நகைச்சுவை நாயகனாகவே சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் வடிவேலு.

நகைச்சுவை நாயகன்

வடிவேலு பேசிய பல வசனங்கள் இன்றும் டிரெண்டிங் தான். திரையில் வருகிறாரோ, இல்லையோ, அவரது பெயரைக் கேட்டாலே சிரிக்கும் அளவிற்கு அடைமொழியோடு தான் அறிமுகமாவார். நேசமணி, சினேக் பாபு, ஏட்டு ஏகாம்பரம், கைப்புள்ள, நாய் சேகர் என வடிவேலுவிற்கு வைக்கப்பட்டும் பெயர்களை கேட்டாலே சிரிப்பு வந்துவிடும். இவரது நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், முக பாவனைக்காக மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கியுள்ளார். ஹீரோக்கள் பலர் தனது கெட்டப்புகளை மாற்றாமல் ஒரே மாதிரியான ஸ்டைலில் தோன்றினார்கள். ஆனால் நம்ம வடிவேலு, ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஸ்டைல் தான். வடிவேலுவின் காமெடிக்காகவே பல படங்கள் வெற்றியடைந்துள்ளது. இவரது நடனமும், பாடி லாங்குவேஜையும் ஈடுகட்ட, இதுவரை யாராலும் முடியவில்லை.

மீம்ஸ்களின் அரசன்

படங்களில் மட்டுமே தோன்றாமல் இவரது முகத்தை பல வகையிலும் பயன்படுத்துகின்றனர். மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு இவர்தான் அரசன். இவரை வைத்துதான் அவர்களின் வேலையே. மீம்ஸ்களிலும், அன்றாடம் நாம் ஷேர் செய்யும் மொபைல் ஸ்டிக்கர்களிலும் இவரது முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். வடிவேலுவின் டயலாக்குகள் அனைத்தும் சிறு சிறு வீடியோக்களாகவும் ஷேர் செய்து வருகின்றனர். அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை அரசனுக்கு, இன்று பிறந்தநாள் என்றதும் ரசிகர்கள் அவர் திக்குமுக்காடும் அளவிற்கு வாழ்த்து மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றனர். பல சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இணையதளம் மூலம் வடிவேலுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here