பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் வீடு ஏலத்திற்கு வருவது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த நடிகர்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த ஜாக்கி சான், ஸ்டன்ட் மேனாகி பிறகு குங்ஃபூ படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1978 ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக் இன் த ஈகில் ஷேடோவ் என்ற படம் மூலம் அனைவராலும் அவர் கவனிக்கப்பட்டார். இவர் படங்களில் இடம்பெற்ற காமெடி கலந்த ஆக்‌ஷன் காட்சிகள், அதிக வரவேற்பை பெற்றதால் மக்கள் மத்தியில் இவர் ஒரு நிலையான அங்கிகாரம் பெற்றார். பின்னர் அவரது சினிமா வாழ்க்கை உச்சத்துக்குச் சென்றது. இவர் கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான ‘கிளிம்பர்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து விஷ் டிராகன், வான்கார்ட், த ஹாண்ட்சம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

வீடு ஏலம்

ஜாக்கிசானுக்கு ஹாங்காங்கைப் போலவே, பெய்ஜிங்கிலும் வீடு உள்ளது. டோங்ஜிமன் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தில், இரண்டு அபார்ட்மென்ட்களை கொண்ட அந்த வீடு, சுமார் 13 ஆயிரம் அடிகள் கொண்டது. இதில் 6 படுக்கை அறைகள் உள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடிகர் ஜாக்கி சான் தன் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். அந்த வீட்டை யுஜியா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து ஜாக்கி சான் வாங்கினார். சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட்டின் விளம்பரங்களுக்கு உதவிய ஜாக்கிசான், குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொடுத்து அந்த வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிறுவனம் பத்திரத்தை முறைப்படி ஜாக்கி சானுக்கு மாற்றித் தரவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், யுஜியா நிறுவனத்துக்கும், டென்ஹோங் என்ற மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில், கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. யுஜியா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பதற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து யுஜியாவின் சொத்துக்கள் கணக்கிடப்பட்ட போது, அதில் ஜாக்கி சான் வசிக்கும் குடியிருப்பும் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, ஜாக்கி சானின் வீடும் வரும் 30 ஆம் தேதி ஏலத்தில் விடப்பட இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு 14.9 மல்லியன் டாலர் ஆகும். ஏலத்தில் இதன் ஆரம்ப விலை 10.5 மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜாக்கி சான் வசிக்கும் வீடு ஏலத்துக்கு வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here