வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், முண்டியம்பாக்கம் 15 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் 11 செ.மீ., நிலக்கோட்டை 10 செ.மீ., பாடாலூர், நீடாமங்கலம் தலா 8 செ.மீ., திருச்சுழி, தாளவாடி, கொள்ளிடம் தலா 7 செ.மீ., விழுப்புரம் 6 செ.மீ., மானாமதுரை, அரவக்குறிச்சி, திருச்சி விமான நிலையம், வேடசந்தூர், மூலநூர், சாத்தூர் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here