இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு சினிமா பிரபலங்களும், கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

வெற்றி நாயகன்

ஹீரோவாக இருக்க வேண்டுமென்றால் சிவப்பான நிறம், ஆறடி உயரம், நடனம் ஆடவும் தெரிய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. பார்ப்பதற்கு ஆள் ஸ்டைலாக இருந்தால் மட்டுமே ஒரு முன்னணி நடிகராக வலம் வர முடியும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில், திறமை இருந்தால் யாராலும் ஜெயிக்க முடியும் என நிரூபித்தவர் விஜயகாந்த். விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட விஜயகாந்த், ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் 1981 ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், மாபெரும் வெற்றியையும் பெற்றது. சிவந்த கண்கள், உயர்ந்த புருவம் என்று தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு சினிமாவை ஆண்டு வந்தவர் விஜயகாந்த். இவரது படங்கள் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வயதான தோற்றத்திலும் சரி, போலீஸ் அதிகாரி ஆனாலும் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டார்.

அரசியல் பயணம்

‘புரட்சிக் கலைஞர்’ எனவும் ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த், திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு 2006 ஆம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ்நாட்டு அரசியலில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்டார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்த், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடும் கேப்டன் விஜய்காந்திற்கு, திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here