சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி கடைகள் மூடப்பட்டு, பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியதையடுத்து, கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன.

கடும் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் சென்னையில் மதுக்கடைகளை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்; “சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும் பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்த பிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி, அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்! யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். கொரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்”. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here